கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிலிருந்து :
இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலம் (Spring) என்பது மிதவெப்பமண்டல இடங்களில் காணப்படும் நான்கு பருவ காலங்களில், குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையில் வரும் காலமாகும். புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது.
எந்த ஊருக்கு லீவில் செல்வதென்றாலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருப்பது வழக்கம். கோத்தகிரியில் இருந்து பஸ் மேட்டுப்பாளையத்தை தொடும் போதே வெப்பத்தை உணர முடியும். ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தும் மனநிலை இருக்காது. கோவில்பட்டிக்கு செல்லும்போதெல்லாம் ஒரு புதிய அனுபவமாகத்தான் இருக்கும். காலையில் தென்னந்தோப்பில் உள்ள பம்ப்செட்டில் 10 பைசா கொடுத்துவிட்டு தண்ணீரை வாரி வாரி அடித்து குளித்ததும், கண்மாய் கரையில் சைக்கிள் ஓட்டி பழகியதும் இன்றைக்கும் மனதுக்குள் நீங்காத நினைவுகளே. தினமும் நாராயணசாமி தியேட்டேருக்கோ ராமசாமி தியேட்டேருக்கோ சென்று படம் பார்த்ததும் ஒரு தனி அனுபவம். பல புராண, வரலாற்று கதாபத்திரங்கள் எனக்கு அறிமுகம் ஆனது இங்கேதான்.
சில மாலைவேளைகளில் அரசு பொருட்காட்சிக்கும் செல்வோம். வெண்திரை ஒன்று கட்டி , ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்டுவதை வியப்புடன் பார்த்தவாறு இருப்பேன். பொருட்காட்சிக்கு செல்ல முடிவு எடுப்பதே ஒரு சுவாரசியமான அனுபவம். சில அக்காமார்கள் அன்று பொருட்காட்சியில் போடபோகும் படம் என்ன என்று துப்பறிந்து வந்து விடுவார்கள். அதை வைத்து ஒரு கூட்டம் பொருட்காட்சி பார்க்க கிளம்பிவிடும். இதில் அமோக ஆதரவு எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி படங்களுக்கே. ஜெமினி படத்துக்கும் கணிசமான ஆதரவு உண்டு என்றாலும் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி முன்பு அவர் தோற்பது உறுதி.
பகல் முழுவதும் ஊரை சுற்றி வந்த அலுப்பில் இரவு உணவு சாப்பிடும் போதே கண்கள் சொருக ஆரம்பிக்கும். வெளி முற்றத்தில் நீர் தெளித்து குளுமை படுத்திய இடத்தில் அந்த காம்பௌண்டில் குடியிருக்கும் அனைவரும் தூக்கம் கண்களை தழுவ தழுவ ஊர் கதை பேசிக்கொண்டே தொங்க ஆரம்பிப்பதை இப்போது நினைத்து பார்த்தால் தொலைகாட்சி தொடர்களை ஒளிபரப்பும் விஞ்ஞான வளர்ச்சியை சபிக்கத்தான் தோன்றுகிறது.
எந்த ஊருக்கும் போகாத ஒரு மே மாதத்தில் தான் எனக்கு பாட புத்தகங்களை தாண்டி மற்ற புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது. பள்ளிக்கூடமும் விடுமுறை. கூட விளையாடவும் ஆள் இல்லாமல் இருந்த ஒரு நாள் எங்கள் அப்பா எங்களை நூலகத்திற்கு அழைத்து சென்று நூலகரிடம் அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே எங்கள் அம்மா எங்களிடம் அம்புலி மாமா , பூந்தளிர் மற்றும் கோகுலம் புத்தகங்களை பற்றி கூறியிருந்ததால் நாங்களும் அந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தோம். அன்று ஆரம்பித்த புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. சிறுவர் புத்தகங்கள், ராணி காமிக்ஸ், லயன் ,முத்து, மினி லயன், திகில் காமிக்ஸ் என தொடர்ந்து, கிரைம் நாவல் , பாலகுமாரன் புத்தகங்கள் என வளர்ந்து விட்டது. இப்போதும் என்னால் புத்தகங்களுடனான உறவை முறித்து கொள்ள முடியவில்லை.
இளவேனிற்கால சரக்கொன்றை மரம் போல மனம் பூப்பூத்து கிடக்கும் மாதம் மே மாதம். வெளியே எவ்வளவு வெயில் அடித்தாலும் மனம் மட்டும் சிலிர் என்று சில்லிட்டு கிடக்கும் மாதம் மே மாதமே !!!



